சில குறைகள் இருக்கத்தான் செய்தன. சில மையங்களில் தேர்வர்கள் உடன் வந்த பெற்றோர் / பாதுகாவலர் காத்திருக்க இடம், குடிநீர் கழிப்பறை வசதிகள் அறவே இல்லை. வண்டிகள் நிறுத்தும் இடமும் போதுமான அளவுக்கு இல்லை; சில மையங்கள் பேருந்துபோக்குவரத்தில் இருந்து மிகவும் தள்ளி, ஒதுக்குப்புறமாக இருந்தன. காலை 9 மணிக்கே மையத்துக்கு வர இயலாமல் சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாமல் போயிற்று.
இத்துடன் தேர்வர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்த மிக முக்கிய சவால் - ‘இயற்கை அழைப்பு'. காலை 9 முதல் மதியம் 1 வரை நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் ‘அடைக்கப்பட்டு' இயற்கை அழைப்புகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டவர்கள் நிலைமை சங்கடம்தான். குறிப்பாக, 'வயது உச்சவரம்பு' இல்லாத இத்தேர்வில், நாற்பதுவயதிற்கு மேற்பட்டோர் கணிசமானஅளவில் தேர்வு எழுத வந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இந்த ‘பிரச்சினை' குறித்துதெளிவான ‘வழிகாட்டு' குறிப்புகள்,தேர்வர்களுக்கு, கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படலாம்.
ஓர் அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் - விண்ணப்பித்த தேர்வர்களில் எத்தனை பேர் தேர்வு எழுத வருகிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. வந்தாலும் வராவிட்டாலும், அத்தனை பேருக்கும்தான், வினாத்தாள் - விடைத்தாள் முதல் தேர்வு மைய இருக்கை வரை தயார் செய்தாக வேண்டும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் 22 லட்சம் பேரைக் கையாள்வது மிகவும் அசாதாரண பணி. தேர்வு ஏற்பாடுகளில் மிக நேர்த்தியாக செயல்பட்டு இருக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தேசிய அளவில், சர்வதேச அளவில், ‘சிறந்த தேர்வு ஏற்பாட்டு அமைப்பு' என்று அங்கீகரிக்கப்படலாம்; அதற்கு முற்றிலும் தகுதி உடையது. சற்றும் ஐயமில்லை.
இனி, தேர்வுக்குள் நுழைவோம்.
தமிழ்மொழி, பொது அறிவு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பரவலாகப் பல கேள்விகள் மிகவும் தரமாக இருந்தன.
இலக்கணக் குறிப்பு - தொடர் வகைகள், பொருத்தமற்ற பெயர்ச் சொற்களைக் கண்டறிதல், பிழைகள் அற்ற, குறிப்பாக சந்திப்பிழை அற்ற தொடர், விடைக்கேற்ற வினா உள்ளிட்ட வழக்கமான கேள்விகள் தேவர்களை ‘அமைதிப்படுத்தி' இருக்கும்.
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்.." கூறியவர் யார்? ‘‘மன்னனும் மாசறக் கற்றோனும்..’’, ‘‘மதியாதார் முற்றம்..’’ ‘ஆற்றூர்' பேச்சுவழக்கில் எவ்வாறு மருவியுள்ளது? ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல..' ‘சிலைமேல் எழுத்து போல' உணர்த்துவது என்ன? உள்ளிட்ட சுமார் 40 வினாக்கள் எளிமையோ எளிமை. கிராமப்புறத் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
‘இடைநிலை' கேள்விகள் நிறைய இருந்தன.
தமிழ், ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எவை? கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த நூல் எது? சரியான இணை: விசும்பு - வானம், மதியம் - நிலவு; நடனக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை; இளம் பெண்களுக்கு திருமண உதவி திட்டம் யாருடைய பெயரில் அரசு வழங்குகிறது? ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தேர்வுக்காகச் சற்று ‘மெனக்கெட்டு' இருந்தால், நிச்சயம் விடை அளித்து இருக்க முடியும்.
கடினமான கேள்விகளில் ‘சாமர்த்தியம்' தெரிகிறது.
ஒரு வாக்கியம்: வேலைவாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது - செயற்கை நுண்ணறிவுக்கு முன்பாக ‘ச்' என்கிற ஒற்று வருமா? ‘செயற்கை நுண்ணறிவு' ஒரு பாடப்பிரிவு என்று கொண்டால் ஒற்று வராது; தனியே ‘செயற்கை' என்று சொல்லாகக் கொண்டால் ஒற்று வரும்! ஆணையம் ஒருவேளை இரண்டு விடைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்... பார்ப்போம்.
அடுத்ததாக பொது அறிவு! இந்தத் தேர்வைப் பொருத்தவரை இந்தப் பிரிவில்தான், ஆணையம் மிகச்சிறப்பான பாராட்டு பெறுகிறது.
எந்தப் பக்கமும் சாயவில்லை; நேர்த்தியான நடுநிலைக் கேள்விகள். பொது அறிவுப் பிரிவில் ஒரு பொதுநோக்கு தெரிகிறது. குரூப்-4 தேர்வு தானே என்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சரியான தரம். சபாஷ்!
எபிதீலீயஸ் புற்றுநோய் உருவாவதற்கு என்ன பெயர்? ‘மார்ஸ் மிஷன்' நாடுகள் எவை? ஓரவை ஈரவை சட்டமன்றங்கள், பள்ளிக்கல்வி தொடர்பான விருதுகள், இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்கள் தயாரிக்கும் அதிகாரம், கரோனா வைரஸ் சோதனைக் கருவி தொடர்பான வினாக்கள், மிக நிச்சயம், ‘யுபிஎஸ்சி' இன் தரத்துக்கு இணையானவை.
கணிதத்தில் எப்போதும் போல தனிவட்டி - கூட்டுவட்டி, வேலை ஆட்கள் - நாட்கள், மீச்சிறு பொது மடங்கு ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கமான எளிய கேள்விகள்.
எளிமை, கடினம் இரண்டும் சரி விகிதத்தில் இருந்த பொது அறிவுப் பகுதி, ஆணையத்தின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.
இந்தப் பகுதியிலும் ‘சுவாரஸ்யமான' கேள்விகள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு 'புதிர்'! (முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை)
'100இல் இருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?'
நிறைவாக, ஒரு கேள்வி மட்டும் மிஞ்சுகிறது.
7300 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்!
இத்தனை லட்சம் பேருக்கும் நாம் என்ன சொல்லப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு