Pages

    ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்


    ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை. கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது.

    ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.

    "2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

    மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.

    ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு