ஆர்.கே. நகர் உள்பட 5 இடங்களில் புதிதாக பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும் (பாலிடெக்னிக்குகள்), 3 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ஆர்.கே.நகர், தருமபுரி கடத்தூர், திருவாரூர் வலங்கைமான், தஞ்சாவூர் ரகுநாதபுரம், கிருஷ்ணகிரி கெலமங்கலம் ஆகிய 5 இடங்களில் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், தேனி மாவட்டம் வீரபாண்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய 3 இடங்களில் அரசு-கலை அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. இதில், ஆர்.கே.நகரில் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை தாற்காலிகமாக தரமணியில் உள்ள மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இயங்க உள்ளது.
கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்களும்...:
இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கான கட்டடங்கள், திருப்பூர் காங்கேயம், நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இடங்களில் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் நிர்வாகக் கட்டடங்கள், மதுரையில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணிமனைக் கட்டடம், சென்னையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அணுக்கரு ஆற்றல் காட்சிக் கூடம், புதுமைகாண் காட்சிக் கூடம், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சிக் கூடம், திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் பரிணாம வளர்ச்சிப் பூங்கா ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 39 அரசு பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு