எல்லாமே அரசாங்கம் குடுக்கும்; குடுக்கணும்னு எதிர்பார்க்கறதில்லை. நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சாவே போதும்.
விஜயலட்சுமி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர். 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக இருந்தவர்.
"நான் இப்போது வேலை பார்க்கும் பள்ளியில்தான் என் ஆரம்பக்கல்வியைப் படித்தேன். நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குப் பரப்பி, நாமும் முன்னேறித் தனித்துவமாக இருக்க ஆசிரியப்பணிதான் சிறந்தது என்பதை உணர்ந்து ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தேன். ஊத்துக்குளிக்கு அருகில் உள்ள தேனீஸ்வரன்பாளையம் என்னும் கிராமத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு வருடம் கழித்து, நான் படித்த ஊத்துக்குளி ஆரம்பப்பள்ளிக்கே மாற்றல் கிடைத்தது.
எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் சந்தோஷம்; மறுபக்கம் பயம். துணிந்து வேலைக்குச் சென்றேன். எனக்குத் தலைமை ஆசிரியராக இருந்தவரே அப்போதும் தலைமை ஆசிரியராய் இருந்தார். நான் படிக்கும்போது இருந்த 12 ஆசிரியர்களே அப்போதும் அங்கு வேலை பார்க்க, 13-ம் ஆளாய் நானும் வேலை பார்க்கத் தொடங்கினேன். முதல் மாதம் சம்பளம் வந்தவுடனே. தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். ''என்கிட்டயே படிச்சு, என்கிட்டயே அடிவாங்கி, கடைசியில என்கிட்டயே சம்பளமும் வாங்கற; ரொம்ப சந்தோஷம்'' என்று மகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவடுக்கில் பத்திரமாய் இருக்கிறது.
படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்
உதவி ஆசிரியராக அதே பள்ளியில் என்னுடைய பத்து வருடங்கள் கழிந்தன. எங்களின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற, மற்றொரு தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார். வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அதற்கடுத்த தலைமை ஆசிரியரின் பெயர்ப் பட்டியலில் நான் இருக்க, தலைமை ஆசிரியை பதவி கிடைத்தது. கடிதம் வந்த அடுத்த நாளில் இருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது.
நான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர் ஆகியிருக்கிறேன். இந்தப்பள்ளியில் எனக்குக் கிடைத்த வசதிகளைவிடப் பலமடங்கு உயர்வாய் என் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டேன். ஒன்றாக வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கு எவ்விதமான தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இரண்டு மாதங்கள் தலைமை ஆசிரியர் நாற்காலியிலேயே உட்காரவில்லை" என்கிறார்.
எல்லா ஆசிரியர்களும் தனக்குச் சகோதர, சகோதரி, நண்பர்கள்தான் என்பதை உணர்த்திவிட்டுத்தான் தலைமை ஆசிரியர் அறைக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அறையைச் சுத்தம் செய்யும்போது, அவருக்கு ஆங்கிலேயே அதிகாரிகள் கையெழுத்திட்ட பள்ளி அனுமதி அட்டை கைக்குக் கிடைத்திருக்கிறது. 1906-ம் ஆண்டு அந்தப்பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது 2005-ம் ஆண்டு. நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டார்.
பள்ளி நூற்றாண்டு விழா
எல்லோருமாக ஒன்றுசேர்ந்து பழைய ஆவணங்களையெல்லாம் ஒன்று திரட்டி, திருப்பூர், ஈரோடு, கோவை என பரவிக்கிடந்த முன்னாள் மாணவர்களைச் சந்தித்து, நன்கொடை பெற்றனர். கிடைத்த பணத்தைக் கொண்டு பள்ளிக்கு இரண்டு கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பொதுமக்களோடு சேர்ந்து நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு தனியார் பள்ளியின் தரத்துக்கு இணையாக தங்கள் ஆரம்பப்பள்ளியையும் கொண்டு வரும் ஆசையை மற்ற ஆசிரியர்கள் மனதிலும் விதைத்தார்.
"நிதிவசூல் அனைத்தையும் வெளிப்படையாகவே மேற்கொண்டோம். பள்ளியின் புறக்கட்டுமானம், கல்வி மற்றும் கலை இலக்கிய செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வையில் படுமாறு பார்த்துக்கொண்டோம். இதன் மூலம், பொதுமக்களுக்கு, தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கும் தன்னம்பிக்கையும், பண உதவி தேவைப்படும்போது தயங்காமல் கொடுக்கும் எண்ணமும் வரும் என்று யோசித்தோம்.
பள்ளிக்கு நிதி வேண்டி, சும்மா கொண்டுபோய் நோட்டீஸ் கொடுத்தால், தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று யோசித்து, நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்னர், ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்தோம். பின்னர் நோட்டீஸ்களைக் கொடுக்கத் தொடங்கினோம். 4 மணிக்குப் பள்ளி முடிந்ததும் இரவு 10 மணி வரை எல்லா ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று பேசியதில், 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை அது. இதற்கு முன்னால் பலமுறை கேட்டும் உதவாத பலரும், அவர்களாகவே முன்வந்து, 'நாங்க என்ன செய்யணும், சொல்லுங்க!' என்றார்கள்.
புரவலர் திட்டத்தின் மூலம், ஆளுக்கு 1000 ரூபாய் வீதத்தில் 50,000 ரூபாயை சேகரித்தோம். கிடைத்த பணத்தை வைத்து, பள்ளி வகுப்புகளில் சுவரோவியங்களை வரைந்தோம். அவை வெறும் ஓவியமாக மட்டுமில்லாமல் படிக்கவும், அதைப்பார்த்து எழுதவும் வசதி கொண்ட தகவல்களாக இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். அதுபோக கேரம், செஸ், பரமபதம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
அசத்திய அறிவியல் கண்காட்சி
2014-ம் ஆண்டில் சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளோடு சேர்ந்து மொத்தம் 243 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற ஒரே அரசு, ஆரம்பப்பள்ளி நாங்கள்தான். எங்கள் பள்ளியின் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமாக அழகாக, தங்கள் செயல்முறை திட்டங்களை விளக்கினர். அந்த நிகழ்வுக்குப் பிறகு, பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியில் இருந்து 18 குழந்தைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் எங்கிருந்தாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அது" என்று தன்னம்பிக்கை வார்த்தை சொல்கிறார்.
பள்ளி கட்டிடத்துக்காக அடமானம் வைக்கப்பட்ட நகை
கல்வியை நல்ல முறையில் கொடுக்க ஆரம்பித்த பின்னர், ஆசிரியை விஜயலட்சுமிக்கு வகுப்புகளின் தரத்தை முன்னேற்றும் எண்ணம் வந்தது. தன் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக ஆக்க எண்ணி, அரசின் உதவியால் கட்டிடம் கட்டும் பணி தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணி பாதிக்கும் மேல் நடந்து, பணப்பற்றாக்குறையால் அப்படியே நின்றது. எல்லாரும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நிற்க, ஆசிரியை விஜயலட்சுமி சற்றும் சளைக்கவில்லை. தனது நகையை அடமானம் வைத்து, 75 ஆயிரம் புரட்டிக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார். இதைக் கேள்விப்பட்ட கல்வி அதிகாரி, அருகில் இருந்த பள்ளிக்கு வந்த காசோலையை வாங்கிவந்து இந்தப் பள்ளிக்கே கொடுத்திருக்கிறார்.
நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த ஆசிரியை விஜயலட்சுமியின் பயணத்தில், நடுநிலைப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராய் மாற்றல் வந்தது. ஆனால் தனது கனவுப் பள்ளியில் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கிறது என்று எண்ணியவர், மாற்றலை நிராகரித்துவிட்டார்.
கணினிவழிக் கல்வி
கணினியின் அவசியத்தை உணர்ந்து, பள்ளியில் அதற்கேற்ற மாதிரியான மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினார். அது குறித்துச் சொல்பவர், "தலைமை ஆசிரியரின் அறையை கணிப்பொறி அறையாய் மாற்றினோம். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் 2 கணினிகளையும், பொதுமக்கள் நிதியில் இருந்து 1 கணினியையும் வாங்கினோம், படிப்பதற்கு சிறிய நூலகங்கள், பேச ஒலிபெருக்கிகள், ஒலிப்பான்கள் ஆகியவை வகுப்பிலேயே தனித்தனியாக வைக்கப்பட்டன.
வெள்ளி மன்றம் என்ற பெயரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் ஒரு மணிநேரம், மாணவர்களின் பாட்டு, பேச்சு, ஓவியம், நாடகம் என தனித்திறமைகளை வெளிப்படுத்தச்செய்வோம். அரசு விழாக்களை வித்தியாசமான முறையில் கொண்டாடுவோம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில், 'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற தலைப்பில், 22 குறுநாடகங்களை நிகழ்த்தினோம்.
எங்கள் மாணவர்கள், விடுதலைப் போராட்டத்துக்காகப் போராடிய திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், ருக்மிணி லட்சுமி உள்ளிட்ட 22 தேசத் தலைவர்களாக வேடமிட்டு, வீதிகளில் குறு நாடகங்களை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலிகள், தொகுப்பு வேலைகள் முடிந்து உள்ளூர்ச் சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதோடு, மற்ற மாணவர்களையும் நம் பள்ளிக்கு வரத்தூண்டுமே என்ற எண்ணம்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நெகிழ்கிறார்.
ஆசிரியர்கள் விழாக்களுக்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வெட்டி, ஒட்டி, அட்டைகள் செய்து, அதில் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இதற்காக மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பாராட்டுப் பெற்றிருக்கிறது ஆசிரியர் குழு. அதுபோக, மாவட்ட தலைவர் நிதியில் இருந்து ஒன்றரை லட்சம் நிதி பெற்று, பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை அமைத்திருக்கின்றனர். வாரம் ஒரு முறை யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
"சரியாகப் பேசத் தெரியாமல், ஒன்று, இரண்டு கூடச் சொல்ல வராமல், மூன்றாம் வகுப்புக்கு வந்துசேர்ந்தான் ஹரிஹரன். அப்பா இல்லை அவனுக்கு. கூலி வேலை செய்யும் அம்மா, தங்கைதான் வாழ்க்கை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியை ஒருவரின் தீவிர முயற்சியில் மெல்ல மெல்லக் கற்றுத் தேர்ந்தான். இரண்டே ஆண்டில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நாச்சிமுத்து கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு அவனை அழைத்துப் போனோம். அங்கே எவ்விதத் தடங்கலும் இல்லாமல் காற்றாலை குறித்த தனது செயல்முறைப் பாடத்தை விளக்கினான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த அவனின் அம்மாவுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
கண்ணீர் சொட்டச் சொட்ட ஆனந்தமாய்ப் பேசிய ஹரிகரனின் தாய், எங்களுக்கு அத்தனை முறைகள் நன்றி சொன்னார். நாட்கள் சென்றன. மகனும், மகளும் படிப்பதைப் பார்த்த, கூலி வேலை செய்யும் ஏழைத்தாய்க்கு, தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயக்கத்துடனே வந்து என்னிடம் கேட்டார். நான்காம் வகுப்பு படித்திருந்த அவரை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்து விட்டேன். கூலி வேலைக்குப் போய்விட்டு வந்து, மாலை வகுப்புக்குச் செல்கிறார். தன் குழந்தைகளோடு அமர்ந்து அவரும் படிக்கிறார். நிச்சயம் ஒரு நாள் வேறு வேலைக்குப் போவார். இதை விட எனக்கு வேறேன்ன வேண்டும்?"
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு