Pages

    ஆதார் எண் கொடுத்தால்தான் பேராசிரியர்களுக்கு ஊதியம்! கல்லூரிகள் எச்சரிக்கையால் சிக்கல்

            உச்ச நீதிமன்றம் "ஆதார் எண் கட்டாயமல்ல' எனக் கூறி வந்தபோதிலும், ஆதார் எண் கொடுத்தால்தான் ஊதியம் என சில தமிழக பொறியியல் கல்லூரிகள் கூறியிருப்பது பேராசிரியர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது


            அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது.இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், "ஆதார் எண் கட்டாயமல்ல' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது.


    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆதார் எண் கட்டாயமல்ல' என மீண்டும் தீர்ப்பளித்ததுடன், "ஆதார் எண் கட்டாயம் அல்ல' என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்தக் குழப்பம் காரணமாக, சிலர் ஆதார் பெறுவதற்கான முயற்சியையே கைவிட்டனர். 
    இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அதாவது, கல்லூரிகளின் பேராசிரியர் நியமன முறைகேடுகளைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களின் முழு விவரங்களை ஏஐசிடிஇ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

    அவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது ஆதார் எண்ணும் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேராசிரியர்களிடம் ஆதார் எண்ணைப் பெற வேண்டும் என, இணைப்புக் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகமும் அறிவுறுத்தியுள்ளது.இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, பேராசிரியர்களிடம் ஆதார் எண்ணைப் பெறும் நடவடிக்கைகளை பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சில கல்லூரிகள், "ஆதார் எண்ணை இந்தமாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாத ஊதியம் வழங்கப்படாது'என பேராசிரியர்களை எச்சரித்துள்ளன.


    இதுகுறித்து அந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள் கூறியது:


    ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியதால், எங்கள் கல்லூரியில் பல பேராசிரியர்கள் ஆதார் அட்டையை வாங்குவதற்கான முயற்சியை இதுவரை எடுக்காமலே இருந்தோம்.ஆனால், இப்போது ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.


    இதன் காரணமாக, ஒவ்வொரு பேராசிரியராக விடுப்பு எடுத்துக் கொண்டு, ஆந்திர எல்லைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஆதார் முகாமுக்கு குடும்பத்துடன் சென்று விண்ணப்பித்து வருகிறோம் என்றனர்.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியது:பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. 
    இரண்டு அல்லது மூன்று கல்லூரிகளை நடத்திவரும் சில அமைப்புகள், ஒரே பேராசிரியரை இரண்டு கல்லூரிகளிலும் கணக்குக் காட்டுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.இதைத் தடுக்க ஆதார் எண் பயனுள்ளதாக இருக்கும். இதற்காகவே, ஏஐசிடிஇ உத்தரவுப்படி பேராசிரியர்களிடம் ஆதார் எண்ணைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், அதற்காக ஊதியத்தை நிறுத்திவைப்பது போன்ற நடவடிக்கைகளை கல்லூரிகள் எடுக்கக் கூடாது.


    இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றனர்


    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு