Pages

    மாணவர்களுக்கு உதவும் சூடவாடி அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சூடவாடி அரசு தொடக்க பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மேலாக படிப்பிலும் நல்லொழுக்கங்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்களுடைய சம்பளப் பணத்தில் மாணவர்களின் கல்விக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.


    ஒசூர் சூடவாடி பகுதியில் நகராட்சித் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 528 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    ஒசூர் நகராட்சிப் பகுதியில் அதிக மாணவர்கள் படித்து வரும் நகராட்சிப் பள்ளியில் ஒசூர் தேர்பேட்டை, பார்வதிநகர், ராஜகணபதிநகர், சானசந்திரம், வெங்கடேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஏழை எளிய மாணவர்கள் அதிகமாக படித்து வருகின்றனர்.

    இப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள், அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஏழைகள். தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் அரவணைத்து நடத்தி வருகின்றனர்.

    தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக தங்கள் மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தங்களின் சொந்தச் செலவில் செய்து வருகின்றனர் ஆசிரியர்கள். 528 மாணவர்களுக்கும் அடையாள அட்டை, டை, பெல்ட், காலணிகள் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

    மாணவர்கள் கூட்டாக அமர்ந்து படிக்கும் வகையில் ஆசிரியர்களின் சம்பளத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் 90 ஏபிஎல் மேசை வாங்கியுள்ளனர். அதேபோல, அறிவியல் சம்பந்தமான படிப்புக்கு கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி, டிவிடி பிளேயர் ஆகிய பொருள்களை பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் வாங்கியுள்ளனர்.

    மாணவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வரிசையாகச் செல்ல வேண்டும், பாடங்களை குழுவாகக் கற்க வேண்டும், வகுப்பறையில் அமைதியாக இருக்க வேண்டும் என இப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கும் நல்லொழுக்கப் பயிற்சிகளின் பட்டியல் நீள்கிறது. 160 புரவலர்கள் குழு அமைத்து அவர்களிடம் பெற்ற பணத்தை வங்கியில் செலுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு பள்ளியின் மற்ற வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றனர்.

    இது போன்று மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பெற்றோர்களும், பொதுமக்களும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
    இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பவுன்துரை தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிருந்தாலும், நல்ல மாணவர்களை உருவாக்குவதே தனக்கு கிடைக்கும் மிகப் பெரிய விருது எனத் தெரிவித்தார்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு