முதல்வர் ஜெயலலிதா பாணியில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம், கல்வித் துறை செயலர் சபிதா அடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
புதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலான நிகழ்ச்சிகளை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சில் நடத்துகிறார். போக்குவரத்து நெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி, உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் முறையில் அடிக்கடி கூட்டம் நடத்துவதால், கல்வித் துறையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று, மாவட்ட சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்தினார்.
கவலை:
இந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடத்துவதால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
பார்க்க முடிவதில்லை:
இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறியதாவது:அடிக்கடி, 'மீட்டிங்' நடக்கிறது. அதிகாரிகள் பெரும்பாலும், தலைமைச் செயலகத்தில், செயலர் நடத்தும் கூட்டங்களில் தான் இருக்கின்றனர்; கோப்புகளை பார்க்க நேரம் இல்லை. கூட்டம் முடித்து மாலையில் வருகின்றனர்; இரவு உட்கார்ந்து, 'பைல்' பார்க்க வேண்டியுள்ளது. அதனால், முக்கியமான பைல்களை, உரிய நேரத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லாவற்றுக்கும், செயலக உத்தரவையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மீட்டிங் என, அதிகாரிகள் சென்று விடுவதால், இயக்குனர் அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை. செயலகம் சென்றால், அங்கிருந்து இயக்குனர் அலுவலகத்துக்கு திருப்பி அனுப்புகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், கல்விப் பணிகளில் பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்போடு நிற்பதும், பெயரளவில் அமல்படுத்துவதுமே தொடர் கதையாக இருக்கும். இயக்குனர் அலுவலகங்களையும், செயலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு