Pages

    விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்களுக்கு கல்விசாரா பணி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

    மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட கல்விசாரா பணிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.


    ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சி.பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் கூடுதல் பணிதான் ஆதார் எண் இணைக்கும் பணி. இரண்டும் வேறு வேறு பணி அல்ல. இது அலுவல் பணி மட்டுமே, பொதுமக்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரிடர் கால உதவி, தேர்தல் பணிகளில் ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம் எனச் சட்டம் உள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இது அலுவலகப் பணி போன்றதல்ல. ஆசிரியர்கள் வேலை நேரங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆதார் எண் குறித்த தகவல்களைச் சேகரித்து பணிகளை முடிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது என்றார். பின்னர், அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், பள்ளிப் பணி நேரங்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தவில்லை.

    இது கூடுதல் பணியாகவே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் விடுமுறை நாள்களில் மட்டும் இதுபோன்ற பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    No comments:

    Post a Comment

    குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    -அன்புடன் ஆட்சியர் கனவு குழு