தூத்துக்குடி மேலத்தட்டப்பாறையைச் சேர்ந்த எஸ்.எஸ்தர் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2012-இல் பணியில் சேர்ந்தேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி ஆகாததால் என்னுடைய நியமனத்தை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அங்கீகரிக்கவில்லை. எனவே அவருடைய உத்தரவை ரத்து செய்து தொடர்ந்து பணி செய்யவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரை பணியில் அமர்த்த தாற்காலிகமாக அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினர் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என எதுவாக இருந்தாலும் தகுதி உடைய ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முறை. மேலும், தகுதித் தேர்வு முறையானது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், மாநில அரசுகள் குறுக்கீடு செய்ய முடியாது. சிறுபான்மையினர் பள்ளி என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனும் மனுதாரரின் வாதம் முறையானதல்ல. கல்வித் தகுதியில் வேறுபாடு காண முடியாது எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எஸ்.மணிக்குமார் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பான இறுதி உத்தரவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து வழங்கப்படும். மேலும் மனுதாரரும் தற்போது பணியில் உள்ள காரணத்தினால் அவருக்கு உரிய ஊதியத்தை வழங்க உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு: கல்வி சம்பந்தமான அனைத்து செய்திகளும், அனைத்து மெட்டீரியல்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ அட்மினுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
-அன்புடன் ஆட்சியர் கனவு குழு